இரண்டு தவணைகளில் வழங்கப்படும் இழப்பீடு
இந்த சமரச ஒப்பந்தத்தால், அக்டோபரில் தொடங்கவிருந்த கூட்டாட்சி நீதிமன்ற விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. AMC முதற்கட்டமாக 85 மில்லியன் டாலரை இந்த மாதம் வழங்கும். மீதமுள்ள 35 மில்லியன் டாலர் 2027 ஜனவரி 31ஆம் தேதி செலுத்தப்படும்.
தொடரின் உருவாக்கத்துக்கு அடிப்படையான காமிக்ஸ் படைப்பின் ஆசிரியர் ராபர்ட் கிர்க்மேன், நிர்வாகத் தயாரிப்பாளர்கள் கேல் ஆன் ஹர்ட், க்ளென் மஸாரா, டேவிட் ஆல்பர்ட் மற்றும் சார்லஸ் ஈக்லீ ஆகியோர் 2017ஆம் ஆண்டு AMC மீது வழக்குத் தொடர்ந்தனர். தொடரால் கிடைத்த லாபத்தில் தங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
2020ஆம் ஆண்டு கலிபோர்னியா நீதிபதி AMC-க்கு சாதகமாகத் தீர்ப்பளித்ததால் தயாரிப்பாளர்கள் முதற்கட்ட பின்னடைவை சந்தித்தனர். பின்னர், தொடரின் முதல் ஷோரன்னரான ஃபிராங்க் டராபோன்ட் மற்றும் அவரது நிறுவனமான CAA தொடர்ந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம், தயாரிப்பாளர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பளித்தது.
AMC தொடரின் ஒளிபரப்பு உரிமைகளைத் தனது விநியோக துணை நிறுவனத்துக்கு செயற்கையாகக் குறைந்த விலையில் விற்றதாக டராபோன்ட் மற்றும் CAA குற்றம்சாட்டினர். அந்த வழக்கு 2021ஆம் ஆண்டு 200 மில்லியன் டாலர் சமரசத் தொகையுடன் முடிவடைந்தது.
தற்போதைய The Walking Dead settlement-ல் 120 மில்லியன் டாலர் இழப்பீட்டுடன், தொடரின் அடுத்த பாகங்கள் மற்றும் ஸ்பின்-ஆஃப் நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர்களின் உரிமைகள் தொடர்வதும் அடங்கும்.
































