2026 ஜூலை 29 அன்று வெளியிடப்பட்ட IRCC வழிகாட்டுதலில் C20 பிரிவின் கீழ் வேலை அனுமதி பெற விரும்பும் வெளிநாட்டவர் கனடாவுக்கு வெளியே உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரிபவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது.
அதாவது, கனடாவுக்கு வந்த பின்னரே அந்த நிறுவனத்தில் வேலை தொடங்கவிருந்த புதிய ஊழியர்களுக்கு இந்த வேலை அனுமதி வழங்க முடியாது என்ற நிலை உருவாகியிருந்தது.
ஆனால் இந்த மாற்றம் திட்டமிட்ட கொள்கை அல்ல என்றும் ஆவணப் பதிப்பு தொடர்பான தவறினால் அந்த நிபந்தனை வெளியிடப்பட்டதாகவும் IRCC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2026 ஆகஸ்ட் 6 அன்று திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு ஏற்கனவே வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.
C20 என்பது பரஸ்பர வேலைவாய்ப்பு அடிப்படையில் வழங்கப்படும் ஒரு வேலை அனுமதி வகையாகும். இதன் கீழ் கனடாவில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்போது அதற்கு இணையாக கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் உருவாக அல்லது தொடர வாய்ப்பு இருக்க வேண்டும்.
இந்த வகை வேலை அனுமதிக்கு Labour Market Impact Assessment தேவையில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்புகள் மற்றும் அரச அமைப்புகள் போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு இந்த வகை அனுமதி பயன்படுத்தப்படுவது வழக்கமாகும்.
எனினும், இதனால் அனைவரும் தானாக C20 வேலை அனுமதிக்கு தகுதி பெறுவார்கள் என்று பொருளல்ல. பரஸ்பர வேலைவாய்ப்பு உள்ளிட்ட C20 பிரிவுக்கான ஏனைய தகுதி நிபந்தனைகள் தொடர்ந்து பொருந்தும்.


































