இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்த திருமணத் திட்டம்
கனடாவைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த ஓராண்டுக்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நிதினுடன் பழகத் தொடங்கினார். சமூக வலைதளங்கள் வழியாகத் தொடர்ந்த உறவு காதலாக மாறியதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
நிதினைத் திருமணம் செய்யும் நோக்கில் சுற்றுலா விசாவில் அந்தப் பெண் நவம்பர் 11-ம் தேதி டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்ற நிதின், தனது மாமா மற்றும் அத்தையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் சுமார் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர்.
அப்போது அந்தப் பெண்ணின் வயது 61 என்பது நிதினுக்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திருமணத்தை மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓராண்டாகத் திட்டமிடப்பட்டிருந்த திருமணம் இரண்டு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.
மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், நவம்பர் 13-ம் தேதி டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார். தூதரக அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், நவம்பர் 14-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் இருவரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி நிதினைக் கைது செய்த போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அந்தப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கோட்புட்லியில் உள்ள தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். பானிபட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் குறித்தும், சம்பவத்தின் பின்னணி குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அவரை பாதுகாப்பாக கனடாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த Canadian woman dating app case தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.





























