Enhedslisten கட்சியின் அரசியல் தலைவர் Pelle Dragsted, 2027ஆம் ஆண்டு 22 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பொதுப் போக்குவரத்து இலவசமாகும் என்று ஏழு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, 22 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் ஒரே கட்டமாக இலவசப் பயணம் வழங்கப்படாது.
மெட்ரோ பயணத்தில் நேரக் கட்டுப்பாடு
முதற்கட்டமாக 18 முதல் 22 வயது வரையிலான இளைஞர்களுக்கு மெட்ரோ, பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் சலுகை வழங்கப்படலாம். எனினும், கோபன்ஹேகன் மெட்ரோ மற்றும் Storebælt வழியாகச் செல்லும் ரயில் பயணங்களில் விதிவிலக்குகள் இருக்கும். மெட்ரோவில் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரையும் உள்ள நெரிசல் நேரங்களில் இலவசப் பயணம் அனுமதிக்கப்படாது என கூறப்படுகிறது.
பின்னர் மேலும் பல வயதுப் பிரிவுகளுக்கு திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு முதலில் 2 பில்லியன் குரோனர் ஒதுக்கியிருந்த நிலையில், மொத்தச் செலவு சுமார் 3.2 பில்லியன் குரோனராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ மற்றும் Storebælt ரயில்களில் ஏற்கெனவே இடப்பற்றாக்குறை இருப்பதால், திட்டம் நெரிசலை அதிகரிக்கக்கூடும் என்று DI Transport எச்சரித்துள்ளது. அதன் இயக்குநர் Hakon Iversen, இலவசப் பயணத்தால் பணம் செலுத்தும் பயணிகள் சாலைகளைத் தேர்ந்தெடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம் என்றார். DTU பேராசிரியர் Otto Anker Nielsen-மும் இதேபோன்ற கவலையை தெரிவித்துள்ளார். Denmark free public transport திட்டம் தொடர்பான இறுதி உடன்பாடு வார இறுதிக்குள் எட்டப்படும் என பேச்சுவார்த்தை தரப்புகள் நம்புகின்றன.

































