ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தின்போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தல் தனிநபர்களை மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்கக் கட்டமைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள் தற்போது வரைவு தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்குகள் தாமதமடைவதற்கு முக்கிய காரணமாக உள்ள அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகளுக்கு ஏற்ப வழக்குகள் தொடர்பான தரவுகளை வகைப்படுத்துவதுடன் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையால் ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
பாடசாலைகளில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் இணைந்து செயல்படுத்தும் ‘மிதுரு பாடசாலை’ வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. அதிக போதைப்பொருள் அபாயம் காணப்படும் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிப்பதற்கு சட்ட நடவடிக்கைகளுடன் சமூக மட்டத்திலும் வேகமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பையும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.































