யாழ்ப்பாணம் கலட்டி வீதியில் உள்ள மிலேனியம் தனியார் விடுதியில் நடைபெற்ற எல்நினோ தொடர்பான செயலமர்வில் உரையாற்றிய அவர், இந்து சமுத்திரப் பகுதியில் அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். நீர் வழியாக வெப்பம் நிலத்தை விட சுமார் 16 மடங்கு வேகமாக பரவுவதால் கடல் வெப்பநிலை உயர்வு விரைவாக பரவி பருவநிலை மாற்றங்களை தீவிரப்படுத்தும் எனவும் அவர் விளக்கினார்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை கடுமையான வறட்சி நிலவும் நிலையில், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழை மற்றும் வெள்ள அபாயமும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, பொதுமக்கள் தற்போதே நீர் முகாமைத்துவத்தை சரியாக பின்பற்றி குடிநீர் சேமிப்பு மற்றும் நீர் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு எதிர்வரும் வறட்சி காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதிபராஜா வலியுறுத்தியுள்ளார்.




























