புதிய விதிகளின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது உடன் பயணம் செய்யும் பெரியவர்களுடன் அருகருகே அமருவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் உதவி தேவைப்படும் பயணிகளுக்கும் அவர்களது துணையுடன் இலவசமாக அருகிலுள்ள இருக்கைகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணப்பொதி கட்டணங்கள் மற்றும் பிற கூடுதல் கட்டணங்கள் அனைத்தும் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். இதனால் பயணிகள் மறைமுகக் கட்டணங்களால் பாதிக்கப்படாமல் முழு செலவையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.
விமானம் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டால் இழப்பீடு பெறும் நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனம் பயணிகளுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து தகவல் வழங்க வேண்டும். மேலும், இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சில நுகர்வோர் அமைப்புகள் புதிய விதிகளில் சில இழப்பீட்டு கோரிக்கைகளுக்கான காலவரம்பு குறைக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளன. எனினும் குடும்பங்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுப் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை பல அம்சங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




























