பிரான்சில் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே கல்வியாண்டில் தொடர்ந்து அல்லது இடைவேளைகளுடன் 2 மாதங்களைக் கடந்த பயிற்சி பணியில் (Internship) ஈடுபட்டால், அவர்களுக்கு மாதாந்திர ஊதியம் (Stipend / Gratification) வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் உறுதியாகக் கூறுகிறது. இந்த விதிமுறைகள் Education Code – Article L124-6 இன் அடிப்படையில் நடைமுறையில் உள்ளன. ஒரே கல்வியாண்டில் பயிற்சி நிறுவனம் மாணவரை 308 மணிநேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் கட்டாயமாக குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இந்த பயிற்சி ஊதியம், Social Security Hourly Ceiling (சமூக பாதுகாப்பு மணிநேர உச்சவரம்பு) என்பதின் 15% ஆக நிர்ணயிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் சமூக பாதுகாப்பு மணிநேர உச்சவரம்பு €29 ஆக இருப்பதால் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு €4.35 ஆக உள்ளது.
ஆனால் 2026 ஜனவரி 1 முதல் இந்த சமூக பாதுகாப்பு மணிநேர உச்சவரம்பு €29 இலிருந்து €30 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் காரணமாக பயிற்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு €4.50 ஆக உயர்வடைகிறது (€30 × 15%). இந்த உச்சவரம்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது.
ஒரு பயிற்சி காலம் இந்த மாற்றக் காலத்துடன் (உதாரணமாக டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 15 வரை) நடைபெறுமானால ஜனவரி 1 முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்பதை பயிற்சி ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும், சில தொழில்துறைகளில் Collective Agreement (கூட்டு ஒப்பந்தம்) அடிப்படையில் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்தபட்சத்தைவிட அதிக ஊதியம் வழங்கப்படலாம். எனவே பயிற்சி மாணவர்கள் தங்களின் துறை சார்ந்த கூட்டு ஒப்பந்தத்தை சரிபார்த்துக்கொள்வது அவசியம்.
பயிற்சி ஊதியத்தை எளிதாக கணக்கிட உதவும் Minimum Stipend Calculator (Simulator) ஒன்று Entreprendre.Service-Public.fr இணையதளத்தில் கிடைக்கிறது. இந்த ஊதிய உயர்வு பிரான்சில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார ஆதரவை அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.





Leave a Reply