காவல் நிலையத்தில் ஏற்பட்ட சிகிச்சை தாமதம்
2023 செப்டம்பர் 9 அன்று சன்பரி பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறுக்குப் பிறகு ஜான் மகாய் போலீஸ் கவனத்திற்கு வந்தார். தலையில் காயங்களுடன் இருந்த அவரை ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைக்கவில்லை எனக் கூறி போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பயணத்தின்போதும் அவர் மயக்கமடைந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பிராட்மீடோஸ் காவல் நிலையத்தில் அவரை ஒரு அறையில் படுக்க வைத்தபின், நான்கு மணி நேரத்துக்கும் மேலாக அவர் அசைவின்றி இருந்தார். போலீசார் அவரை தீவிரமாகக் கண்காணிக்கத் தவறியதாகவும், அவர் குடிபோதையில் இருப்பதாக கருதியதாகவும் விசாரணை தரப்பு தெரிவித்தது.
போலீஸ் அதிகாரிகள் ஆம்புலன்ஸைக் கோரியபோதும், அவசர சேவை பணிச்சுமை காரணமாக தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு பணியாளர் ஆம்புலன்ஸ் கோரிக்கையை தவறுதலாக ரத்து செய்ததாக Triple Zero Victoria தெரிவித்தது. ஆம்புலன்ஸ் வந்தபோது, மூளைக்கு ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. காயம் உயிர் பிழைக்க முடியாதது என மருத்துவர்கள் தெரிவித்தனர்; சில நாட்களுக்குப் பிறகு உயிர்காக்கும் கருவிகள் நிறுத்தப்பட்டன.
John Makai inquest-ல் போலீஸ் தரப்பு பராமரிப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என ஒப்புக்கொண்டு, குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டது. சில ஊழியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவசர அழைப்புகளை தவறாக ரத்து செய்வதைத் தடுக்கும் மென்பொருள் மாற்றங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
































