கொழும்பில் உள்ள SEMA கட்டிடத்தில் நேற்று (28) நடைபெற்ற டிஜிட்டல் கையொப்பம் (LankaSign) மற்றும் காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்த திட்டம் அரசின் பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கிய அங்கமாகும் என்றும் இலங்கையின் பொதுச் சேவைகளை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். Paperless Customs
புதிய முறைமையின் மூலம் சுங்க அனுமதி பெறும் செயல்முறை வேகமாகவும், வெளிப்படையாகவும், திறமையாகவும் இடம்பெறும். குறிப்பாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆவணங்களை விரைவாக சமர்ப்பித்து அனுமதி பெறும் வசதி ஏற்படுவதால் நேரமும் செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் LankaSign டிஜிட்டல் கையொப்பம் ASYCUDA சுங்க முறைமையுடன் இணைக்கப்படுவதன் மூலம் சட்ட அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான முறையில் அனைத்து சுங்க ஆவணங்களையும் இணையவழியாக சமர்ப்பிக்க முடியும். டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்ட பின்னர் ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டால் அதை உடனடியாக கண்டறியும் வசதியும் இந்த முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பதிலும் இது முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த டிஜிட்டல் முறைமை அறிமுகமாகினாலும் சுங்க அனுமதி முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படமாட்டாது என்றும் அவர்களின் பணிமுறை மட்டுமே புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றமடையும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்தார். அத்துடன் இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.




























