இணையத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் PHP நிரலாக்க மொழியில் இரண்டு முக்கியமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்யும் புதுப்பிப்புகளை PHP Foundation புதன்கிழமை பிற்பகல் வெளியிடுகிறது. இந்தக் குறைபாடுகள் மூலம் அங்கீகாரம் தேவையில்லாமல் தொலைவிலிருந்து நிரல் இயக்கப்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் CERT-EU தெரிவித்துள்ளது.
பல அரச இணையதளங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானின் சைபர் பாதுகாப்பு அமைப்புகள் உடனடி புதுப்பிப்பை வலியுறுத்தியுள்ளன. நெதர்லாந்தின் சைபர் பாதுகாப்பு நிறுவனம் தனது இணையதளத்தை தற்காலிகமாக அணுக முடியாதபடி செய்துள்ளது. அந்நாட்டின் தேசிய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம், நாடாளுமன்றத்தின் கீழவையான Tweede Kamer ஆகியவற்றின் இணையதளங்களும் செயலிழந்துள்ளன.
PHP, WordPress, Drupal, Joomla, Magento உள்ளிட்ட உள்ளடக்க மேலாண்மை அமைப்புகள், பகிரப்பட்ட ஹோஸ்டிங் தளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. PHP security update நிறுவுவது மட்டுமல்லாமல், நிறுவனங்கள் தங்களின் அனைத்து PHP பயன்பாடுகளையும் கண்டறிந்து கண்காணிக்க வேண்டும் என்று சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குறைபாடுகள் மூலம் ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவவோ, இணையதளங்களை முடக்கவோ வாய்ப்புள்ளது. எந்த PHP பதிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும், 2004ஆம் ஆண்டு வெளியான PHP 5 முதல் வந்த அனைத்து பதிப்புகளும் பாதிக்கப்படக்கூடும் என CERT-EU தெரிவித்துள்ளது. புதுப்பித்த பிறகும் மூன்றாம் தரப்பு மென்பொருள் மற்றும் சேவை வழங்குநர்களின் பாதுகாப்பு அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.































