இதற்கு முன்னர் மே 29 ஆம் தேதி அல்-அஹ்சாவில் 49.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தற்போது பதிவான 50 டிகிரி வெப்பமே இந்த ஆண்டின் இதுவரையிலான அதிகபட்ச வெப்பநிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டம்மாம், தஹ்ரான், அல்-கோபர், ஜுபைல், கதீஃப், ராஸ் தனூரா, ஹஃபர் அல்-பாத்தின், அல்-கஃப்ஜி, அல்-நைரியா, புகைக் மற்றும் அல்-அஹ்சா உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் 49 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடும் வெப்பத்துடன் தூசி நிறைந்த காற்றும் வீசக்கூடும் என்பதால், நெடுஞ்சாலைகள் மற்றும் திறந்த வெளிப் பகுதிகளில் பார்வைத் திறன் குறையக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவக்கூடும் என்று தேசிய வானிலை மையம் ஏற்கெனவே முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஜூலை மாத மழைவீழ்ச்சியும் வழக்கத்தைவிட குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் வெப்பம் காரணமாக அப்பகுதி மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மாற்றியமைத்துள்ளனர். பகல் நேர உச்ச வெப்பம் நிலவும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நிழலான இடங்களில் இருப்பது மற்றும் வாகனங்களை செல்ல வேண்டிய இடங்களுக்கு அருகில் நிறுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல் சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் கிரீம் பயன்படுத்துதல் தொப்பி மற்றும் சூரியக் கண்ணாடி அணிதல் போன்ற பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் நிகழ்ச்சிகள் சிரமமாகியுள்ளதால் குளிரூட்டப்பட்ட வணிக வளாகங்கள் திரையரங்குகள் உட்புற விளையாட்டு அரங்குகள் மற்றும் உணவகங்களில் மக்கள் நேரத்தைச் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

































