இந்த மோசடி கும்பல்கள், இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுத் துறை (CID), நிதி குற்ற விசாரணைப் பிரிவு (FCID) அல்லது வங்கிப் பிரதிநிதிகள் என தங்களை அடையாளம் காட்டி, பொதுமக்களை அச்சுறுத்தி ஏமாற்ற முயற்சிப்பதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
பொதுவாக, பணம் சுத்திகரிப்பு, நிதி மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது என்றும், உடனடியாக கைது செய்யப்படலாம் என்றும் கூறி பயத்தை ஏற்படுத்துவதே இவர்களின் வழக்கமான நடைமுறையாகும். மேலும், நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, பாதிக்கப்பட்ட நபரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது சில பரிவர்த்தனை விவரங்களை மேற்கோள் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை ரகசியமானது எனக் கூறி, குடும்ப உறுப்பினர்களுக்குக்கூட தகவல் சொல்ல வேண்டாம் என அறிவுறுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் போலி அலுவலகங்கள் அல்லது சீருடைகள் காட்டப்படும் காணொளி அழைப்புகள் மூலமும் ஏமாற்ற முயற்சிக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த மோசடியின் இறுதிக்கட்டமாக, குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்துமாறு அல்லது பணத்தை மாற்றுமாறு கோரப்படுவதாகவும், சரிபார்ப்பு, தொழில்நுட்ப அனுமதி அல்லது அரச கணக்கில் தற்காலிகமாக வைத்திருப்பதற்காக பணம் தேவை என கூறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் வங்கி கணக்கு இலக்கங்கள், PIN, OTP குறியீடுகள் அல்லது அடையாள ஆவணப் பிரதிகளை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர்.
இலங்கை பொலிஸ் வலியுறுத்துவதாவது, எந்தவொரு பொலிஸ் அதிகாரியோ அல்லது அரச நிறுவனமோ தொலைபேசி மூலம் பணம், வங்கி விவரங்கள் அல்லது ரகசிய தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கேட்காது. கைது, அழைப்பு அல்லது சட்ட அறிவிப்புகள் தொலைபேசி மூலம் அறிவிக்கப்படுவதில்லை; அவை முறையான சட்ட நடைமுறைகளின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வாறு சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அழைப்பை துண்டித்து, எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அழைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை அல்லது இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வகை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மோசடி செய்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள், வாட்ஸ்அப் செய்தி விவரங்கள், அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட தகவல்களுடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், விளம்பரப் போட்டிகள், பதிவு படிவங்கள், இணையத் தளங்கள் போன்ற வழிகளில் தனிப்பட்ட தகவல்களை பகிரும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து பணம் கேட்டு அச்சுறுத்தும் அழைப்புகள் வருவது மோசடியின் தெளிவான அறிகுறி எனவும் இலங்கை பொலிஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு, இவ்வகை மோசடிகளில் சிக்காமல் இருக்குமாறு இலங்கை பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

































