முதலூரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் – மேரி ரெஜிலா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். நள்ளிரவில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், அங்கு இருந்த குடும்பத்தினரை சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்குப் பிறகு இரு பெண் குழந்தைகளையும் அந்தக் கும்பல் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தல்
இந்த Thoothukudi crime குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், குடும்பத்தினருக்கும் ஞானபிரகாசம் என்பவருக்கும் இடையிலான முன்பகை காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
முன்பகை இருந்தால் அதனால் குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டியது உள்ளூர் காவல்துறையின் கடமை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை அரசு மற்றும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






























