ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் 60 நாள் தடை விலக்கை வழங்கி ஈரானிய எண்ணெயை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் அமெரிக்காவிற்கு விற்பனை செய்யவும் அனுமதித்திருந்தது. எனினும் அண்மையில் ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்ற பாதுகாப்பு பதற்றம் மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அந்தச் சலுகையை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.
மேலும் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அதற்கான விளைவுகளை தெஹ்ரான் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா–ஈரான் உறவுகளில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன் உலகளாவிய எரிசக்தி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

































