இந்த நடவடிக்கை தற்காப்பு நோக்கத்திலானது என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் தாக்குதலால் சில ரேடார் கட்டமைப்புகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ள ஈரான் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோக பாதைகளின் நிலைத்தன்மை குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் ஈரானின் கடலோர ரேடார் தளங்கள் சேதம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க படைகள் மற்றும் கூட்டணி கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் கடலோர ரேடார் நிலையங்கள் இலக்காகக் கொண்டு துல்லியத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.


































