தற்போது வாட்ஸ்அப்பில்(WhatsApp) ஒருவருடன் உரையாட அவர்களின் மொபைல் எண் அவசியமாக உள்ளது. ஆனால் புதிய மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு பயனரும் தங்களுக்கென தனித்துவமான பயனர் பெயரை உருவாக்கி அதனை மட்டுமே பகிர்ந்து மற்றவர்களுடன் இணைந்து பேச முடியும். இதனால் அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்புகொள்ளும் சூழல்களில் கூட தனிப்பட்ட மொபைல் எண்ணை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும் இந்த பயனர் பெயர் வசதி விருப்பத்தேர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பயனர்கள் விரும்பினால் மட்டுமே பயனர் பெயரை பயன்படுத்தலாம். இருப்பினும் வாட்ஸ்அப்(WhatsApp) கணக்கை உருவாக்குவதற்கு மொபைல் எண் தொடர்ந்து அவசியமாகவே இருக்கும்.போலி கணக்குகள் உருவாகுவதைத் தடுக்க ஒரே பயனர் பெயரை இரண்டு பேர் பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன. அதேபோல் பயனர் பெயர் மாற்றப்பட்டால் அதுகுறித்த அறிவிப்பு உரையாடலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியுரிமையை மேலும் மேம்படுத்தும் இந்த பயனர் பெயர் அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp)பயனர்களுக்கு இந்த வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர்.




























