குற்றச் செய்திகள்
ஜெர்மனி எல்லைப் பகுதி அருகே உள்ள ஓவராசெல்ட் பகுதியில், அதிகாலை 4 மணியளவில் முகமூடி அணிந்திருந்த ஆயுதமேந்திய குழுவினர் ஒரு வீட்டை அணுகியதாக காவல்துறை தெரிவித்தது. அப்போது துப்பாக்கிச் சூடு நடந்ததில் 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். அவர் பாதுகாப்புப் பணியாளர் எனக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுக்கு உள்ளாகினர். பல ஆயுதங்கள், தரவு சேமிப்பு சாதனங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ஜோலாண்டா ஆல்பர்ஸ் தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர்கள் தப்பியிருக்கலாம் என்பதால், மக்கள் வீடுகளுக்குள் இருக்கவும் கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு, சர்வதேச கொகெய்ன் கடத்தல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, நெதர்லாந்தின் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக உள்ள ஜோஸ் லெய்டெக்கர்ஸ் எனப்படும் ‘பொல்லே ஜோஸ்’ தொடர்புடைய குற்றவியல் குழுவின் மோதலுடன் இணைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நூறு கிலோகிராம் கொகெய்ன் தொடர்பான நீண்டகால மோதலே காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே வீட்டில் கடந்த ஆண்டும் இதேபோன்ற துப்பாக்கிச் சூடு நடந்ததாக துணை அரசு வழக்கறிஞர் மோனிக் விங்கெஸ்டெய்ன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு கொலை, கொலைக்குச் சமமான குற்றம் மற்றும் கடத்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். மேலும் கைது நடவடிக்கைகள் தொடர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த வன்முறைச் சம்பவம் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக ஓவராசெல்ட் மேயர் ஜோரி மின்சஸ் தெரிவித்தார்.





























