இலங்கையர்கள் வெளிநாட்டில் இருந்து பாஸ்போர்ட் பெறும் அல்லது புதுப்பிக்கும் செயல்முறை இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதற்கான புதிய திட்டம் ஒன்றுக்கு சர்வதேச இடமாற்ற அமைப்பு (IOM) நிதியுதவி வழங்க முனைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளியுறவு அமைச்சரும், பொது பாதுகாப்பு அமைச்சரும் இணைந்து முன்மொழிந்து IOM-க்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் நோக்கம், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பாஸ்போர்ட் பெறும் செயல்முறையை விரைவாகவும் பாதுகாப்பானதாகவும் அத்துடன் இலகுவானதாக மாற்றுவதுமாகும்.
IOM நிறுவனம் ஆரம்ப கட்டமாக 20 வெளிநாட்டு இலங்கை தூதரகங்கள் மற்றும் தூதரக அலுவலகங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் குறித்த வெளிநாட்டு இலங்கை தூதரகங்கள் மற்றும் தூதரக அலுவலகங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும் வசதிகள் மிகவிரைவில் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ்,
- பயோமெட்ரிக் தரவுகளை (முகம், கைரேகை) பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்படும்
- இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத் திணைக்களத்துடன் நேரடி ஆன்லைன் இணைப்பு ஏற்படுத்தப்படும்
- ஒருங்கிணைந்த மென்பொருள் மற்றும் கணினி அமைப்புகள் உருவாக்கப்படும்
- தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும்
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இணைந்த முன்மொழிவுக்கு தற்போது இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பாஸ்போர்ட் சேவைகள் இனி அதிக வசதியுடனும் பாதுகாப்புடனும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply