அந்த ஆண்டில் அகதா தனது தாயை இழந்ததுடன், கணவர் ஆர்ச்சிபால்ட் கிறிஸ்டி விவாகரத்து கோரியதையும் எதிர்கொண்டார். கடுமையான மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையில் இருந்த அவர், டிசம்பர் 3-ம் தேதி இரவு தனது 7 வயது மகள் ரோசலிண்டிடம் விடைபெற்று காரில் வீட்டை விட்டு வெளியேறினார்.
கார் கண்டெடுப்பு முதல் ஹோட்டல் தகவல் வரை
மறுநாள் சர்ரே பகுதியில் உள்ள நியூலேண்ட்ஸ் கார்னர் என்ற இடத்தில், பள்ளத்தாக்கின் விளிம்பில் அவரது கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. முகப்பு விளக்குகள் எரிந்துகொண்டிருந்த காரில், ஃபர் கோட், சூட்கேஸ் மற்றும் காலாவதியான ஓட்டுநர் உரிமை இருந்தன. ஆனால் அகதா மட்டும் அங்கு இல்லை.
அவரைத் தேடும் பணியில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 15,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மோப்ப நாய்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. கணவர் ஆர்ச்சி மீது சந்தேகம் எழுந்த நிலையில், சர் ஆர்தர் கானன் டாயிலும் அகதாவின் கையுறையை வைத்து அவரைத் தேட முயன்றதாகக் கூறப்படுகிறது.
11 நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 14-ம் தேதி வடக்கு இங்கிலாந்தின் ஹாரோகேட் நகரில் உள்ள ஹோட்டலில் அகதா தங்கியிருப்பது தெரியவந்தது. அவர் அங்கு ‘திருமதி தெரசா நீல்’ என்ற பெயரில் பதிவு செய்திருந்தார். இசைக்கலைஞர் பாப் டாப்பின் அவரை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
அந்த 11 நாட்களில் என்ன நடந்தது என்பதை அகதா தனது சுயசரிதையிலும் பதிவு செய்யவில்லை. மனநல பாதிப்பு, கணவரைப் பழிவாங்கும் திட்டம் அல்லது தனது நாவல் விற்பனையை அதிகரிக்கும் முயற்சி என பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும், உறுதியான பதில் கிடைக்கவில்லை. இதுவே Agatha Christie disappearance சம்பவத்தை இன்னும் மர்மமாக்குகிறது.





























