முன்விரோதத்தைத் தொடர்ந்து நடந்த தாக்குதல்
காட்டுவிளையைச் சேர்ந்த உசேனின் மகன் சமீம், துபாயில் கார் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். விடுமுறைக்காகக் கடந்த 15ஆம் தேதி அவர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். சமீமுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன் மகன் முகேஷுக்கும், பைக் எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மூர்த்தி மகன் முகேஷின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், சமீம் வீட்டிற்கு முன்புள்ள பாதையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதை சமீம் தட்டிக் கேட்டதால் இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மூர்த்தி மகன் முகேஷும், குமார் மகன் அகிலும் சமீமின் வீட்டிற்குச் சென்று அவரை மிரட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு கதிரேசன் மகன் முகேஷ் ஸ்கூட்டரில் வந்து, வீட்டு முன்பு நின்றிருந்த சமீமைப் பிடித்து இழுத்துள்ளார். பின்னர், மீன் வெட்டும் அரிவாள்மனையால் சரமாரியாக வெட்டியதுடன், கூர்மையான ஆயுதத்தாலும் குத்தியுள்ளார். இதில் சமீமுக்கு இடது தொடையில் பலத்த வெட்டுக்காயமும், இடது மார்பு, இடது காதின் பின்புறம், இடது தோள்பட்டை மற்றும் வலது முதுகில் ஆழமான குத்துக்காயங்களும் ஏற்பட்டன.
சமீமின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது தாய் ஹயர் நிஷா பீவி மற்றும் உறவினர்களையும் முகேஷ் காலால் எட்டி உதைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் ஸ்கூட்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சமீமை உறவினர்கள் நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், அங்கு விடப்பட்ட ஸ்கூட்டரைப் பறிமுதல் செய்தனர். சமீமின் தாய் அளித்த புகாரின் பேரில் கதிரேசன் மகன் முகேஷ், மூர்த்தி மகன் முகேஷ் மற்றும் குமார் மகன் அகில் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த Kanyakumari murder case தொடர்பாக தலைமறைவான மூவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வருகிறது.





























