கலிபோர்னியாவைச் சேர்ந்த 44 வயது ஹார்வி வெல்லஸ் ஹாஸ்கின்ஸ் IV மற்றும் லண்டனைச் சேர்ந்த 58 வயது மார்க் வில்லியம் மேபேங்க் ஆகியோர் இந்த சிகிச்சையைப் பெற்றனர். விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் முறையான திட்டமிடலுக்குப் பிறகு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருவரும் விரைவாகக் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான எலும்பைப் பாதுகாக்கும் நவீன முறை
வழக்கமான இடுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் அதிகளவு எலும்பு அகற்றப்படலாம். புதிய முறையில் நோயாளியின் ஆரோக்கியமான எலும்பு முடிந்தவரை பாதுகாக்கப்படுகிறது. இதனால் செயற்கை மூட்டின் நிலைத்தன்மை அதிகரிப்பதுடன், நோயாளிகள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் இளவயதினருக்கு இந்த bone-sparing hip surgery முறை உகந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவைசிகிச்சைக் குழுவை வழிநடத்திய எலும்பியல் பிரிவு இணை இயக்குநரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் விஜய் சி. போஸ், நோயாளியின் வயது, எலும்பின் தரம் மற்றும் மருத்துவ நிலையை துல்லியமாக மதிப்பிட்ட பிறகே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து, உலக நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கத்தின் சான்றாக இந்த சாதனை அமைந்துள்ளதாக தெரிவித்தார். சிம்ஸ் துணைத்தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நோயாளிகள் சென்னைக்கு வந்திருப்பது இந்திய மருத்துவ நிபுணத்துவத்தின் மீதான நம்பிக்கையை காட்டுவதாக கூறினார்.





























