சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் காட்சியை காண 50,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஸ்டேடியத்தில் திரண்டிருந்தனர். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய ரக்பி போட்டி தொடங்குவதற்கு முன்பு விமானங்கள் பறந்தன. அதே நேரத்தில் புகைச் சுடர்கள் வானில் எழுப்பப்பட்டன.
விமானங்கள் ஸ்டேடியத்தின் கூரைக்கு மிகவும் அருகில் சென்றதாகக் காணப்பட்டதால், சிலர் இந்தச் செயல்பாடு ஆபத்தானது எனக் கூறினர். அதேவேளை, இதனை துல்லியமான திட்டமிடல் மற்றும் திறமைக்கான வெளிப்பாடு என பலர் பாராட்டினர்.
கேப் டவுன் விமான சாகசம் பாதுகாப்புடன் நடந்ததாக ஏர்லிங்க் தகவல்
இந்தப் பறப்புக்கான திட்டம் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் ஆதரவுடன் கவனமாக தயாரிக்கப்பட்டதாக ஏர்லிங்க் தெரிவித்துள்ளது. விமானங்கள் அனுமதிக்கப்பட்டு, முன்கூட்டியே பயிற்சி செய்யப்பட்ட பாதுகாப்பு உயரம் மற்றும் வேக வரம்புகளுக்குள் இயக்கப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
ஒவ்வொரு விமானத்திலும் மூன்று மூத்த தலைமை விமானிகள் பணியாற்றினர். ஒருவர் கட்டளை அதிகாரியாகவும், ஒருவர் இணை விமானியாகவும், மற்றொருவர் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாகவும் செயல்பட்டனர். அனைவரும் அதிக அனுபவம் கொண்டவர்கள் என ஏர்லிங்க் குறிப்பிட்டுள்ளது.
விமானப் பாதை கண்காணிப்பு ஆய்வின்படி, முன்னணி விமானம் ஸ்டேடியத்தின் உச்சியிலிருந்து 50 அடி, அதாவது சுமார் 15 மீட்டர் உயரத்தில் கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விமானங்களும் ரசிகர்கள் நிறைந்த அரங்கமும் இடையே இருந்த குறைந்த இடைவெளி குறித்து கேள்விகள் எழுந்தன.
தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கேய்டன் மெக்கென்சி, நாட்டின் விமானிகள் உலகின் சிறந்தவர்களில் அடங்குவதாகக் கூறி இந்தக் காட்சியைப் பாராட்டினார். இதனை தேசிய பெருமைக்குரிய தருணமாக பல தென்னாப்பிரிக்கர்கள் சமூக ஊடகங்களில் வரவேற்றனர்.
பெரிய போட்டிகளுக்கு முன்பு குறைந்த உயரத்தில் விமானங்கள் பறக்கும் நிகழ்வு தென்னாப்பிரிக்காவில் முன்பும் இடம்பெற்றுள்ளது. 1995 ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு, ஜொகன்னஸ்பர்க்கில் உள்ள எல்லிஸ் பார்க் மைதானத்தின் மேலாக தென்னாப்பிரிக்க ஏர்வேஸ் விமானம் பறந்தது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தை வீழ்த்தியது.

































