அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA), தேசிய பாதுகாப்பு முகமை (NSA), எஃப்.பி.ஐ. ஆகியவை அந்த அறிக்கையை வெளியிட்டன. சீன AI துறையின் முக்கிய நிறுவனங்களான Alibaba, DeepSeek, Moonshot AI, Z.ai ஆகியவை இடைநிலை தளங்கள் மூலம் செயல்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
AI மாடல்களின் செயல்பாட்டை நகலெடுக்கும் நடைமுறை
OpenAI, Anthropic, xAI-யின் Grok மற்றும் Google ஆகிய நிறுவனங்களின் மாடல்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க முகமைகள் தெரிவித்துள்ளன. Chinese AI model distillation என்பது ஒரு மாடலிடம் பெருமளவு கேள்விகளை எழுப்பி, அதன் பதில்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்து, அதைப் போன்ற செயல்பாட்டைக் கொண்ட புதிய மாடலை உருவாக்கும் முறையாகும்.
இந்த நடைமுறை சீன AI நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும் கூடுதல் வழிமுறை அல்ல; அவற்றின் மாடல் மேம்பாட்டின் அடிப்படையாக இருக்கலாம் என அமெரிக்க முகமைகள் மதிப்பிட்டுள்ளன. அமெரிக்க AI தொழில்நுட்பத்துக்கும் சீன மாடல்களுக்கும் இடையிலான செயல்திறன் இடைவெளியை குறைக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவை தெரிவித்துள்ளன. சீன அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் இருக்கக்கூடும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
ஜூலை மாதம் சீன வர்த்தக அமைச்சகம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. மாறாக, அமெரிக்க நிறுவனங்களே சீன மாடல்களைப் பயன்படுத்துவதாக அது குற்றம்சாட்டியது. பெரிய அமெரிக்க AI நிறுவனங்கள், மாடல் நகலெடுக்கும் முயற்சி கண்டறியப்பட்டால் சுருக்கமான பதில்களை வழங்குவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசு பரிந்துரைத்துள்ளது.

































