டொலரின் உயர்வு பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை என அரசாங்கம் கூறினால் எரிபொருள் விலைகள் ஏன் தொடர்ச்சியாக உயர்த்தப்படுகின்றன என்பதையும் விளக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் எதிர்வரும் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் அமைச்சர்கள் உண்மை நிலையை மறைத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் கருத்து வெளியிடுவதால் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடியாது என்றார்.
உலக நாடுகள் தங்களது நாணய மற்றும் நிதி அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கையில் மட்டும் ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் சுருங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களிடம் உண்மையை வெளிப்படையாக தெரிவிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அதன் பின்னர் தேவையான தீர்வுகள் குறித்து அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க முடியும் என்றும் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தினார்.






























