பிரான்சில் பதிவான கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 5 பேர் வெப்பத்திலிருந்து தப்பிக்க நீரில் இறங்கியபோது மூழ்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் விளையாட்டு நிகழ்வுகளின் போது உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலை காரணமாக பிரான்ஸ் வரலாற்றிலேயே அதிகமான மே மாத வெப்பநிலை பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 39°C வரை உயர்ந்துள்ளதாகவும் Météo-France எச்சரிக்கை இந்த வெப்ப அலை இன்னும் சில நாட்கள் தொடரக்கூடும் என எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் மட்டுமன்றி இங்கிலாந்து ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் வெப்ப சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் இதை காலநிலை மாற்றத்தின் தாக்கமாக விளக்குகின்றனர். Heat Dome எனப்படும் உயரழுத்த காற்று அமைப்பு காரணமாக வட ஆபிரிக்காவிலிருந்து சூடான காற்று ஐரோப்பாவில் சிக்கியதே இந்த அபூர்வ வெப்பநிலைக்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் அரசு பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும் அதிகளவு தண்ணீர் அருந்தவும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.






























