ஈரான் போர் – பலமான கட்டுப்பாடுகள் தேவை, அமெரிக்காவிடம் வளைகுடா நாடுகள் வலியுறுத்தல்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு வெறும் போர்நிறுத்தம் மட்டும் போதாது ஈரானின் இராணுவ மற்றும் தாக்குதல் திறன்களை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் வேண்டும் என்று வளைகுடா அரபு நாடுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஏவுகணைகள் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுத குழுக்கள் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் “ஆயுதமாக” பயன்படுத்தப்படாத வகையில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் வளைகுடா நாடுகள் வலியுறுத்துகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானுக்கு வழங்கிய காலக்கெடுவை நீட்டித்துள்ள நிலையில் போர் முடிவடைந்த பிறகு பிராந்தியத்தின் பாதுகாப்பு அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பது முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது.
ஈரான் போர் மூலமாக வளைகுடா நாடுகளின் எரிசக்தி மற்றும் பொருளாதார துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு அணு ஒப்பந்தம் ஈரானின் யூரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்தினாலும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் திறன்களை அது கட்டுப்படுத்தவில்லை என்பதால் பிராந்தியத்தில் அச்சம் தொடர்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த அனுபவத்தின் காரணமாக, புதிய ஒப்பந்தம் முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என வளைகுடா நாடுகள் கூறுகின்றன. மேலும் ஈரானின் ஏவுகணை களஞ்சியத்தின் ஒரு பகுதி மட்டுமே அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.
கத்தார், ஓமான் மற்றும் குவைத் போன்ற நாடுகள் போரின் விரைவான முடிவை விரும்புகின்றன ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள் எதிர்காலத்தில் ஈரான் மீண்டும் அழுத்தம் கொடுக்க முடியாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் என வலியுறுத்துகின்றன.
இதன் மூலம் வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
இந்த நிலைமை மத்திய கிழக்கு அரசியல் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எரிசக்தி விநியோக பாதைகள் பாதிக்கப்பட்டதால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதுடன் உலகளாவிய வழங்கல் சங்கிலிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே எதிர்கால அமைதி ஒப்பந்தம் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விரிவானதாக இருக்க வேண்டும் என வளைகுடா நாடுகள் வலியுறுத்துகின்றன.





Leave a Reply