கடன் தொல்லையால் கொள்ளை திட்டம்
தீபாவளியை முன்னிட்டு கடையில் பணிகள் நடைபெற்று வந்ததால், அந்த நகைக்கடை குறிவைக்கப்பட்டதாக மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். நிஷாந்துக்கும் மீனாட்சிக்கும் கடன் தொல்லை இருந்ததாகவும், அதன் காரணமாக கொள்ளைத் திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மீனாட்சி தனது ஸ்கூட்டரை நிஷாந்துக்கு வழங்கி உதவியுள்ளார். கடையில் திருட்டு நடைபெறவிருப்பது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நிஷாந்தின் தந்தை சுரேஷ், நகைகள் அடங்கிய பையை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளை தொடர்பாக ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நிஷாந்தின் கைகளில் இருந்த டாட்டூக்கள் அவரை அடையாளம் காண காவல்துறைக்கு உதவியதாக ஆணையர் தெரிவித்தார். இந்த வழக்கில் வேறு யாரேனும் உதவியுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.15 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. Madurai jewellery store robbery வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
































