இந்த செயலிழப்பு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களை பாதித்தது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். வியாழக்கிழமை மைக்ரோசொஃப்ட் 365 சேவைகளில் அணுகல் சிக்கல்கள் தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் பாதிப்பு நீடித்தது.
சேவை பாதிப்புக்கான காரணம்
இந்தப் பிரச்சினை “நெட்வொர்க் திறன் மேம்படுத்தல்” பணியின் போது ஏற்பட்டதாக மைக்ரோசொஃப்ட் தெரிவித்தது. இது இணையத் தாக்குதல் அல்லது செயற்கை நுண்ணறிவு செயலியால் ஏற்படவில்லை என்றும் நிறுவனம் விளக்கியது. சேவைகளைப் படிப்படியாக மீட்டதாகவும், மீண்டும் தொடங்கிய பிறகு அவை நிலையாக இயங்குவதை உறுதி செய்ய இந்த நடைமுறை தேவைப்பட்டதாகவும் கூறியது.
ஜப்பான் அரசு, பிலிப்பைன்ஸ் உச்சநீதிமன்றம், ஆஸ்திரேலிய உளவு அமைப்பு, வட அமெரிக்க ரயில்கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களிலும் பாதிப்பு பதிவானது. பிரிட்டனில் தேசிய சுகாதார சேவை, சில பள்ளிகள் மற்றும் காவல்துறை அமைப்புகள் பாதிக்கப்பட்டன. கனடாவில் ரயில் பயணிகளுக்கான மின்னஞ்சல் அறிவிப்புகளும் சில மருத்துவமனைச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
Microsoft global outage, முக்கிய நிறுவனங்கள் சில பெரிய தொழில்நுட்ப சேவை வழங்குநர்களை எவ்வளவு சார்ந்துள்ளன என்பதை வெளிப்படுத்தியதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து முழுமையான ஆய்வு அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என மைக்ரோசொஃப்ட் கூறியுள்ளது.
































