முதல் படகில் சுமார் 250 பேர் பயணித்ததாகவும் அது புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே தொடர்பை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு சுமார் 280 பேருடன் ஜூலை 8ஆம் தேதி ஆயேயார்வாடி கடற்கரை அருகே கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பயணித்தவர்களில் பெரும்பாலானோர் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள். இவர்களில் சிலர் பங்களாதேஷின் காக்ஸ் பசார் அகதி முகாம்களில் இருந்து மீண்டும் மியான்மார் வழியாக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டிருந்ததாக ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன. மியான்மாரில் 2021ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. Myanmar News
ரகைன் மாநிலத்தில் இராணுவத்திற்கும் அரகான் படைக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். வழக்கமான கடல் பயண காலத்திற்கு வெளியே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததாகவும் அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடல் நிலைமை மிகவும் மோசமடைந்திருந்ததாகவும் ஐ.நா. அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இதனிடையே கடந்த வாரம் பங்களாதேஷின் காக்ஸ் பசார் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருந்தனர். இந்தச் சம்பவம் ரோஹிங்கியா அகதிகள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.






























