ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான சர்ச்சைக்குரிய பரிவர்த்தனை குறித்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின், இன்று (04) நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.
நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்: விசாரணையின் பின்னணி
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஆறு ஏர்பஸ் A330 விமானங்களையும், எட்டு ஏர்பஸ் A350 விமானங்களையும் கொள்வனவு செய்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மீது முன்னதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த கொள்முதல் நடவடிக்கையுடன் தொடர்புடையதாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழு ஆரம்பித்த விசாரணையின் அடிப்படையில், கபில சந்திரசேன மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிணையில் இருந்த நிலையில், கபில சந்திரசேன மே 8ஆம் தேதி மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தார். அது தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.
இந்த ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதற்கான திறந்த பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஏர்பஸ் நிறுவனத்தின் பிரான்ஸை தளமாகக் கொண்ட தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்தது. விசாரணைக்கு உதவிய அந்தக் குழு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வாக்குமூலங்களை வழங்கியது. இதனையடுத்து, காலை 9.15 மணியளவில் அழைப்பாணையைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையானார். பின்னர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.





























