‘To Catch a Predator’ நிகழ்ச்சியை விசாரணை பத்திரிகையாளர் கிறிஸ் ஹான்சன் தொகுத்து வழங்கினார். ‘Primetime’ திரைப்படத்தில் ராபர்ட் பாட்டின்சன், ஹான்சன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரைப்படத்தை லான்ஸ் ஓப்பன்ஹைம் இயக்கியுள்ளார்.
Predators ஆவணப்படம் காட்டும் தொலைக்காட்சி முறை
இந்த அமெரிக்க நிகழ்ச்சி 2004 நவம்பரில் NBC தொலைக்காட்சியில் தொடங்கியது. இணையத்தில் சிறார்களாக நடிக்கும் நடிகர்கள் மூலம் பாலியல் நோக்கத்துடன் தொடர்பு கொள்ளும் ஆண்களை நிகழ்ச்சி குழு கண்டறிந்தது. பின்னர் அவர்களை ஒரு வீட்டுக்கு வரவழைத்தது.
அந்த வீட்டின் கதவை சிறாரைப் போல் தோற்றமளிக்கும் நடிகர் அல்லது நடிகை திறப்பார். அதன்பின் கிறிஸ் ஹான்சன் நேரடியாக எதிர்கொள்வார். தொடர்ந்து காவல்துறையினர் வந்து கைது நடவடிக்கை மேற்கொள்வார்கள். குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின் முகங்களும் அடையாளங்களும் மறைக்கப்படாமல் ஒளிபரப்பப்பட்டன.
இந்த முறையால் நிகழ்ச்சி அமெரிக்காவில் விரைவாகப் பிரபலமானது. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பாலியல் வேட்டையாளர்கள் கையும் களவுமாக பிடிக்கப்படுவதைப் பார்த்தனர். ஹான்சன் பல முக்கிய பேச்சு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிகழ்ச்சியைப் பிரசாரம் செய்தார்.
ஆனால் நிகழ்ச்சியின் செயல்முறை ஒழுக்கம் மற்றும் சட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்பியது. 2006ஆம் ஆண்டு டெக்சாஸ் மாநிலத்தின் காஃப்மன் கவுண்டி உதவி வழக்கறிஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்குப் பிறகு சர்ச்சை தீவிரமடைந்தது. நிகழ்ச்சி 2007ஆம் ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டது.
Predators ஆவணப்படம், முன்னாள் தயாரிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சியின் ‘பொறி’ வீட்டில் சிறார்களாக நடித்த இருவரின் அனுபவங்களைப் பதிவு செய்கிறது. கிறிஸ் ஹான்சனும் இதில் பேசுகிறார். இளமையில் தானும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம், நிகழ்ச்சியின் மக்கள் மீதான தாக்கத்தையும் ஆராய்கிறது. இதன் தாக்கத்தால் இன்று YouTube தளத்தில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் உருவாகியுள்ளன. ‘Primetime’ திரைப்படத்தின் கதைக்களம், நிகழ்ச்சியைச் சுற்றியுள்ள துயரமான சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளது.
































