பணவீக்கம் உயர்ந்துள்ளதுடன் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளதாகவும் மக்களின் வருமான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் முக்கிய பங்காற்றும் ஆடைத் தொழில்துறையில் ஹைடிராமணி, மாஸ் லங்கா மற்றும் பிராண்டெக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் முதலீடுகளை அதிகரித்து வருவதாகவும் உள்ளூர் தொழிற்சாலைகளை பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி துறைக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக அமையும் என்றும் இத்தகைய வரிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.
2028 முதல் கடன் சுமை அதிகரிக்கும் சஜித் எச்சரிக்கை
இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதாகவும் 2028ஆம் ஆண்டு முதல் நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தும் சுமை மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சக்தியின் கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாடு 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் 2028ஆம் ஆண்டு முதல் தற்போது செலுத்தப்படும் கடன் தொகைக்கு மேலதிகமாக ஆண்டுதோறும் 2.5 முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டார். ஆனால் நாட்டின் தற்போதைய வெளிநாட்டு நாணய கையிருப்புகள் அந்தச் சுமையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.































