கணவனை காப்பாற்ற வாதாடும் வழக்கறிஞர்
2.34 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர், தன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று சாவித்திரி கூறுவதுடன் தொடங்குகிறது. அவரது விருப்பத்துக்கு மாறாக அதே மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்கிறது. விரும்பாத வாழ்க்கையையும் தனது வேடிக்கையான சுபாவத்தால் அவர் கடந்து செல்கிறார்.
இதற்கிடையில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் சாவித்திரியின் கணவன் குற்றவாளியாக்கப்படுகிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக வழக்கறிஞரான சாவித்திரி தானே களமிறங்குகிறார். தனது விருப்பமில்லாத கணவனின் விடுதலைக்காக, தன் சீனியரையே எதிர்த்து அவர் வாதாடுகிறார்.
ஆரம்பத்தில் நகைச்சுவை கலந்த காட்சிகளுடன் நகரும் ‘Sathyavan Savithri trailer’, பின்னர் மிஷ்கின் மற்றும் கீர்த்தி சுரேஷின் வாதங்களால் தீவிரமடைகிறது. சாவித்திரி தனது கணவனை மீட்டாரா என்ற கேள்வியுடன் ட்ரெய்லர் முடிகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் சாருகேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், மதுசூதனன், ஆர். சுந்தரராஜன், பிரிகிடா, மாலா பார்வதி, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவையும், ஜி. கே. பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் நவம்பர் 20 அன்று திரைக்கு வருகிறது.






























