“செம்மணி மனிதப்புதைகுழி நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் பல ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து உண்மையை அறிய காத்திருக்கும் குடும்பங்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1999 ஆம் ஆண்டு காணாமல்போன தனது மகன் குறித்து “அவரது உடற்பாகங்கள் செம்மணியில் கிடைத்தாலும் நான் உடைந்துபோவேன் கிடைக்காவிட்டாலும் உடைந்துபோவேன் அவர் உயிருடன் திரும்பிவந்தால் மட்டுமே மகிழ்ச்சியடைவேன்” என தந்தை பரமநாதன் செல்வராஜா தெரிவித்துள்ள கருத்தும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படும் செம்மணி வலிந்து காணாமலாக்கப்படல்கள் சட்டவிரோதப் படுகொலைகள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான புதிய குற்றவியல் விசாரணைகளுக்கான முக்கிய சான்றாகக் கருதப்பட வேண்டும் என்றும் இதுவரை எந்த இராணுவ அதிகாரியும் குற்றவியல் அடிப்படையில் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படாதது நீதிக்கான செயல்முறையில் பாரிய குறைபாடாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் செம்மணியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வழக்குத் தொடர்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் அவை முறையாகப் பயன்படுத்தப்படாதது பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் நீடித்து வரும் தோல்வியை வெளிப்படுத்துவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.





























