அவர் கூறுகையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மட்டுமல்ல அது பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், பசுமை முதலீடுகள், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மைக்கான அடித்தளமாகவும் அமையும் என்றார்.மேலும் 2026–2035 காலப்பகுதியை உள்ளடக்கிய இலங்கையின் புதிய தேசிய காலநிலை பங்களிப்பு (NDC 3) திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை தொழில்நுட்பம், நிலையான போக்குவரத்து, சுற்றுச்சுழல் பொருளாதாரம் (Circular Economy) உள்ளிட்ட பல முக்கிய இலக்குகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) ஊக்குவிப்பு, தேசிய மின்வலையமைப்பை நவீனமயமாக்கல், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற விவசாயம், நிலையான நில முகாமைத்துவம் மற்றும் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மீளுருவாக்க திட்டங்கள் ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த புதிய உறுதிப்பாடு 2050 க்குள் கார்பன் சமநிலையை (Carbon Neutrality) அடையும் இலங்கையின் நீண்டகால இலக்கை நோக்கிய முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.




























