அண்மையில் மூன்று மணி நேர இடைவெளிக்குள் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன. வத்தளையில் நடைபெற்ற சிறுவர் பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் விசாரணையில் குறிவைக்கப்பட்ட நபருக்கு பதிலாக தவறுதலாக மற்றொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் உதவியதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேல் மாகாண வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் ஐந்து விசாரணைக் குழுக்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.Sri Lanka Shooting Incidents
அதேவேளை தெமட்டகொடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். மார்பில் காயமடைந்த அவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான மோதலுடன் தொடர்புடையதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை அடுத்து தெவிநுவர தேவாலயப் பெரஹெரா பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



























