இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன நேற்றைய தினம் (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்தத் தொகை மதிப்பு இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதி தொகை மதிப்பாகும். தேசிய அளவிலான தரவுச் சேகரிப்பிற்கு முதல்முறையாக டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டமை இதன் விசேஷ அம்சமாகும்.
இதன் மூலம் தரவுச் சேகரிப்பை விரைவுபடுத்தவும் பிழைகளை குறைக்கவும் பெறப்பட்ட தரவுகளை நேரடியாக திணைக்களத்தின் சேவர் கணினிகளுக்கு பதிவேற்றவும் முடிந்தது. அதன்பின் தரவுப் பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயாரிப்பு பணிகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டன.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலில் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அரச உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர்கல்வி பயில்வோர் உள்ளிட்ட விசேஷ பயிற்சி பெற்ற பெருமளவிலானோர் பணியில் இணைந்தனர். இந்த தொகை மதிப்பு 2024 டிசம்பர் 19-ஆம் திகதி நள்ளிரவு (00:00 மணி) கருதப்பட்டது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன, டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தியதன் மூலம் முன்னைய தொகை மதிப்புகளை விட பரந்த அளவிலான தகவல்களைச் சேகரிக்க முடிந்ததாகவும், மிக விரிவான பகுப்பாய்வு கொண்ட அறிக்கையைத் தயாரிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.



























