அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐவர் அமர்வில், நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகூன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வழக்கை விசாரிக்க ஒதுக்கப்பட்டிருந்த 502ஆம் நீதிமன்ற அறையில் இருக்கைகள் போதவில்லை என்றும், பொதுமக்களின் அதிக ஆர்வம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையைப் பெரிய 501ஆம் நீதிமன்ற அறைக்கு மாற்றுமாறு சட்டத்தரணிகள் கோரினர். அந்தக் கோரிக்கைக்கு அமர்வு அனுமதி வழங்கியது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், வழக்கை உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு விசாரிக்க வேண்டும் எனக் கோரினார். முன்மொழியப்பட்ட திருத்தம் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நேரடியாகப் பாதிப்பதால், நலன் முரண்பாடு ஏற்படக்கூடும் என அவர் வாதிட்டார்.
சாலிய பீரிஸ் அலி சப்ரி ஜெஃப்ரி அழகரத்னம் எராஜ் டி சில்வா ஸ்ரீநாத் பெரேரா. அனுர மெதகொட மற்றும் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளும் இதுதொடர்பில் வாதங்களை முன்வைத்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்ன, உச்ச நீதிமன்ற அமர்வை அமைக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்குரியது எனத் தெரிவித்தார். வாதங்களை பரிசீலித்த அமர்வு, முழு அமர்வு கோரிக்கையை நிராகரித்து, தற்போதைய ஐவர் அமர்வே மனுக்களைத் தொடர்ந்து விசாரிக்கும் எனத் தீர்மானித்தது.
மக்களின் இறையாண்மை மற்றும் நீதித்துறை அதிகாரப் பயன்பாடு தொடர்பான அரசியலமைப்பின் 3 மற்றும் 4ஆம் உறுப்புரிமைகளைத் திருத்தம் பாதிக்கும் என்பதால். மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சுமந்திரன் வாதிட்டார்.
நீதியரசர்களின் ஓய்வு வயதை குறைப்பதோ அல்லது நீட்டிப்பதோ நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கக்கூடும் என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சார்பில் அலி சப்ரி தெரிவித்தார். நீதியரசர்களின் சொந்த பதவிக்காலத்தைப் பாதிக்கக்கூடிய வழக்கை அவர்கள் விசாரிப்பது குறித்தும் ஸ்ரீநாத் பெரேரா கவலை வெளியிட்டார்.
தாக்கல் செய்யப்பட்ட 67 மனுக்களில் 41 இணையவழியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.





























