மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் உடல், கடந்த வாரம் திங்கட்கிழமை முட்புதர் குட்டை பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலை வாங்க மறுத்து 9 நாட்கள் போராட்டம்
மாணவரின் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, 9 நாட்களாக உடலை வாங்க மறுத்து காவல் ஆணையர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தினர். அலுவலகத்தை முற்றுகையிட அவர்கள் ஓடியபோது காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.
பெண்கள் உட்பட பலரை காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்தபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. கைது நடவடிக்கையில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கைகளில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. Tamilselvan death case போராட்டம் காரணமாக அழகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டன.































