வரலாற்றுக்கு முந்தைய இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தத் தளத்தில் இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள் தங்க மற்றும் வெண்கல ஆபரணங்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு எலும்புக்கூட்டின் அருகில் கிடைத்த தங்க முத்திரை மோதிரத்தில் பழங்கால தமிழி எழுத்துக்கள் தலைகீழாக பொறிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் ரஞ்சித் குமார் மற்றும் தாய்லாந்து தொல்லியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அதில் “புசரகிதாஸ” எனப் பொறிக்கப்பட்டிருப்பதுடன், அது “பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்” என்ற பொருளைக் கொண்டிருப்பதாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழறிஞர்கள் இந்தப் பொறிப்பு பண்டைய தமிழ் வணிகர்களுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்றும் “அளரி வைரதன்” என்ற தமிழ்ப் பெயரைக் குறிக்கும் வாய்ப்பும் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த மோதிரம் இராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வலுவான கடல்வழி வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை பேணியிருந்தனர் என்பதற்கான முக்கிய வரலாற்றுச் சான்றாகக் கருதப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்கள் அனைத்தும் தாய்லாந்தின் ராட்சபுரி மாகாணத்தில் உள்ள ப்ரா நகோன் கிரி தேசிய அருங்காட்சியகத்திற்கு பாதுகாப்பு மற்றும் மேலதிக ஆய்வுகளுக்காக மாற்றப்பட்டுள்ளன.





























