பாதிக்கப்பட்ட மாணவரின் தோற்றத்தை கேலி செய்த சில மாணவர்கள், அவரைத் தனிப்பட்ட பெயர்களில் அழைத்துள்ளனர். பின்னர் அடித்தல், மிதித்தல், ரப்பர் பேண்டால் இழுத்தல், பபுள்காம் ஒட்டுதல், மரம் மற்றும் இரும்பு ஸ்கேலால் தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு மாணவரை நிர்வாணப்படுத்தி, அவரது ஆணுறுப்பில் மிளகாய்ப்பொடி தூவியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மிளகாய்ப்பொடியால் ஏற்பட்ட எரிச்சலில் மாணவர் அலறியபோது வகுப்பாசிரியை தலையிட்டு விசாரித்துள்ளார். அப்போது, 7-ம் வகுப்பில் படித்த காலத்திலிருந்தே துன்புறுத்தல் தொடர்ந்தது தெரியவந்தது. முதலில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அடையாளம் காணப்பட்ட மேலும் 4 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை அறிக்கை கோரல்
Thoothukudi school POCSO case குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் விரிவான அறிக்கை கேட்டுள்ளார். தலைமை ஆசிரியையிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி கூறுகையில், அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பள்ளியில் குழந்தைகள் நலக்குழு மற்றும் சிங்கப்பெண் அதிரடிப் படை மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் நடத்தை, நண்பர்கள் மற்றும் பழக்கவழக்கங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மனநல நிபுணர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகளில் நல்லொழுக்கக் கல்வி மற்றும் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தவும் அவர் வலியுறுத்தினார்.





























