வாக்குவாதத்துக்குப் பிறகு மாணவி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே செபத்தையாபுரம், சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது மகன் முத்துராஜ், செபத்தையாபுரத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
முத்துராஜின் உறவினரான சுடலைமணியின் 17 வயது மகள், செபத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், மாணவியின் படிப்பு முடிந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என முடிவு செய்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில், மாணவி வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த முத்துராஜ், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், நேரில் பேச முயன்றும் மாணவி தவிர்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் சுமார் 3 மணியளவில் அங்கு சென்ற முத்துராஜ், மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியபோது, மாணவியை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
சாயர்புரம் போலீஸார் விசாரணை
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சம்பவத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பிய முத்துராஜ், செபத்தையாபுரம் பேருந்து நிறுத்தத்தில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்ட போலீஸார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Thoothukudi schoolgirl murder தொடர்பாக சாயர்புரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
































