குற்றப்பத்திரிகைப்படி, 2024 பிப்ரவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 36 சரக்கு ரயில்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் துறைமுகங்கள் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட நைக் காலணிகள், மில்வாக்கி மின்சாரக் கருவிகள், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரயில்களை நிறுத்தி சரக்குகள் கொள்ளை
பிகோ ரிவேரா, புல்லர்டன் உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் லாரிகள் மற்றும் வேன்களில் தண்டவாளப் பகுதிகளுக்குச் சென்று, ரயில்களில் ஏறி காற்றுக் குழாய்களை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரயில்கள் அவசரமாக நிறுத்தப்பட்டபோது, சரக்குகளை வாகனங்களில் ஏற்றி ரகசியக் கிடங்குகளில் பதுக்கியதாகவும், பின்னர் கள்ளச்சந்தை மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கொள்ளையடித்த பொருட்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை குழு உரையாடல்களில் பகிர்ந்ததுடன், சம்பவங்களைப் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த Southern California train robberies வழக்கில் 21 வயதான நாதன் டேனியல் ஏஞ்சல் தலைமையேற்றதாகவும், 23 முதல் 38 வயதுக்குட்பட்ட 13 பேர் கூட்டாளிகளாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சதித்திட்டத்துக்கு 5 ஆண்டுகள் வரையும், ஒவ்வொரு திருட்டுக்கும் தலா 10 ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை கிடைக்கலாம். ரயில் போக்குவரத்துக்கு எதிரான வன்முறைப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் சட்டப்படி நிரபராதிகளாகக் கருதப்படுவர்.






























