கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இந்த சொற்ப விலைக்குறைப்பால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்பதால் தற்போதைய கட்டணங்களில் எந்தவித குறைப்பும் செய்யப்படமாட்டாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணங்களை திருத்துமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு ரூ.16 நட்டத்துடன் சேவையை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் முச்சக்கரவண்டிகளுக்கான QR குறியீட்டு முறை மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளை நீக்கி வாரத்திற்கு 36 லீற்றர் எரிபொருள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருள் விலையை கணிசமாகக் குறைத்திருந்தால் மட்டுமே கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய முடியும் என்றும் தற்போதைய ரூ.20 குறைப்பு போதுமானதல்ல என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.































