திருப்பத்தூர் மாவட்டம், திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியின் மனைவி மாலினி (31), திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பாச்சல் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரஞ்சித்குமார் (30) என்பவருடன் நெருக்கமாகப் பழகியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ரஞ்சித், மாலினியை காரில் அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதியில் உள்ள வீட்டுமனைப் பிரிவுக்குச் சென்றுள்ளார்.
அங்கு பைக்கில் பின்தொடர்ந்து சென்ற சஞ்சீவி காந்தி, கத்தியால் மாலினியையும் ரஞ்சித்தையும் தாக்கிக் கொன்றுவிட்டு தப்பியதாக போலீஸ் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னாள் காதல் தொடர்பு குறித்து விசாரணை
விசாரணையில், மாலினியின் கணவர் சிரஞ்சீவி அளித்த தகவலின் அடிப்படையில் சஞ்சீவி காந்தி குறித்து போலீஸார் அறிந்தனர். செங்கம் திரு.வி.க நகரைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியான சஞ்சீவி காந்தி, மாலினியைப் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்ததாகவும், அவரது திருமணத்திற்குப் பிறகும் தொடர்பைத் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மாலினி தன்னிடம் பேசுவதைத் தவிர்த்து, ரஞ்சித்துடன் தனிமையில் சந்தித்து வந்ததை அறிந்ததால் ஆத்திரமடைந்ததாகவும், ரஞ்சித்துடன் பழக வேண்டாம் என மாலினியை எச்சரித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இந்த இரட்டைக் கொலை நடந்ததாக போலீஸார் கூறுகின்றனர். Tirupattur double murder வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.






























