பிரிட்டனுக்கு வந்தவர்களுக்கும் அங்கிருந்து வெளியேறியவர்களுக்கும் இடையிலான வித்தியாசமே நிகர குடியேற்றம் எனப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் சுமார் 738,000 பேர் பிரிட்டனுக்கு வந்த நிலையில், 661,000 பேர் வெளியேறினர். இதனால், மார்ச் 2023இல் பதிவான 944,000 என்ற உச்ச அளவிலிருந்து நிகர குடியேற்றம் 92 சதவீதம் குறைந்துள்ளது.
பணி, மாணவர் வருகை மற்றும் புகலிடக் கோரிக்கைகள் குறைவு
ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து பணிக்காக வந்தவர்களின் எண்ணிக்கை 45,000 குறைந்தது. மாணவர்களின் வருகை 33,000 குறைந்ததுடன், புகலிடக் கோரிக்கைகளும் 19,000 சரிந்தன. விசா விதிகளில் முன்னைய அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள், பின்னர் தொழிலாளர் கட்சி அரசால் தொடரப்பட்டமை இதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஜூன் வரையிலான ஓராண்டில் 73,000 பேர் புகலிடம் கோரி வந்தனர்; முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 93,000 ஆக இருந்தது. செப்டம்பர் நிலவரப்படி, 41,000 பேர் முடிவுக்காக காத்திருந்தனர். புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக பயன்படுத்தப்பட்ட 52 விடுதிகள் காலி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 140 விடுதிகள் பயன்பாட்டில் இருந்தாலும், அவற்றில் தங்கியிருப்போர் எண்ணிக்கை 13,000 ஆகக் குறைந்துள்ளது.
உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், UK net migration வீழ்ச்சி அரசாங்கம் கட்டுப்பாட்டை மீட்டெடுத்ததைக் காட்டுவதாகக் கூறினார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த கிறிஸ் பில்ப், இந்தச் சரிவு தங்கள் அரசு அறிமுகப்படுத்திய விசா கட்டுப்பாடுகளின் விளைவு எனத் தெரிவித்தார். குடியேற்றம் மேலும் குறையக்கூடும் என்றாலும், இந்த வீழ்ச்சி நிரந்தரமாக இருக்காது என குடியேற்ற ஆய்வு நிபுணர் பென் பிரிண்டில் எச்சரித்துள்ளார்.
































