முன்னைய விதிகளின்படி, பொதிகளில் உள்ள QR குறியீடுகள் பொதுமக்கள் அணுகாத தகவல்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பு உரைக்கு மட்டுமே இணைக்கப்படலாம். தற்போது சந்தைப்படுத்தல் அனுமதி வைத்திருப்பவர்கள் (MAHs), கூடுதல் கல்வி மற்றும் செயல்முறை உள்ளடக்கத்துடன் அவற்றை இணைக்கலாம்.
கால்நடை மருந்து QR குறியீடுகள் வழங்கும் தகவல்கள்
புதிய உள்ளடக்கம் Product Literature Standards (PLS) வெளியிட்டுள்ள QR குறியீட்டு கொள்கைகளுக்கு இணங்க வேண்டும். இந்தக் கொள்கைகள் தகவலின் துல்லியம், பாதுகாப்பு மற்றும் மருந்தைப் பயன்படுத்தும் முறையை தெளிவாக விளக்கும் தன்மையை வலியுறுத்துகின்றன.
எதிர்காலத்தில் சில கால்நடை மருந்துப் பொதிகளில் QR குறியீடுகளை செல்லப்பிராணி உரிமையாளர்கள் காணலாம். ஸ்மார்ட்போன் மூலம் அவற்றை ஸ்கேன் செய்தால், மருந்தை சரியாக வழங்குவது, சிகிச்சையின் போது எதிர்பார்க்கக்கூடிய மாற்றங்கள், தயாரிப்பை பாதுகாப்பாக சேமிப்பது போன்ற தகவல்களைப் பெறலாம்.
இந்தத் தகவல்கள் பொதியிலும் மருந்து விளக்கத் தாளிலும் ஏற்கனவே வழங்கப்படும் அடிப்படை அறிவுறுத்தல்களுக்கு கூடுதலாக இருக்கும். மருந்துகளை சரியாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதில் கால்நடை மருத்துவர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் இது உதவும். அதன் மூலம் விலங்குகளின் உடல்நலம் மற்றும் நலனை பாதுகாக்க முடியும்.
அனைத்து தயாரிப்புகளிலும் QR குறியீடுகள் இடம்பெறுவது கட்டாயமில்லை. சில மருந்து நிறுவனங்கள் தங்களின் ஒழுங்குமுறை இணக்கம் அல்லது போலி தயாரிப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக QR குறியீடுகளைப் பயன்படுத்தலாம். அவை பொதுமக்கள் அணுகும் தகவல்களுடன் இணைக்கப்படாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.
புதிய வழிகாட்டுதல், அத்தியாவசிய மருந்துத் தகவல்களுடன் கூடுதல் டிஜிட்டல் கல்வி மற்றும் செயல்முறை உள்ளடக்கத்தை வழங்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. விலங்கு மற்றும் பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் ஆபத்து அடிப்படையிலான தரநிலைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுவதாக VMD தெரிவித்துள்ளது.





























