ஜூன் மாதத்தில் மேற்கு ஐரோப்பாவின் சராசரி வெப்பநிலை 20.74 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது 1991 முதல் 2020 வரையிலான சராசரியை விட 3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜூனில் ஏற்பட்ட சாதனையையும் இது முறியடித்துள்ளது.
ஜூன் 15 முதல் 30 வரை ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைக்காலத்தில் ஐரோப்பிய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான சுமார் 410 மில்லியன் மக்கள் 35 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலையை அனுபவித்துள்ளனர். குறிப்பாக பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வெப்பம் தொடர்பான பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Europe New
உயர் அழுத்த வளிமண்டல அமைப்பான வெப்பக் குவிமாடம் காரணமாக பல நாடுகளில் மாதாந்திர மற்றும் வரலாற்று வெப்பநிலை பதிவுகள் முறியடிக்கப்பட்டன. அதிக ஈரப்பதம் காரணமாக இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் மத்தியதரைக் கடல் பகுதியில் கடல் வெப்ப அலை உருவாகியுள்ளதுடன் கிழக்கு ஐரோப்பாவில் வறட்சி அபாயமும் ஐபீரிய தீபகற்பம் மற்றும் தென் பிரான்சில் காட்டுத்தீ அபாயமும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உடனடி கார்பன் உமிழ்வு குறைப்பு மற்றும் காலநிலைத் தழுவல் திட்டங்கள் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.





























