TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ByteDance-இன் இணை நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக உயர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளார். Bloomberg Billionaires Index வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி அவரது சொத்து மதிப்பு 92.8 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். TikTok செயலியின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள Doubao செயற்கை நுண்ணறிவு தளத்தின் வெற்றியும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ஜாங் யிமிங் இன் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்துள்ள நிலையில் அவர் தற்போது சீனாவின் மிகப்பெரிய செல்வந்தராகவும் திகழ்கிறார். மறுபுறம் 86.9 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி ஆசியாவின் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேவேளை 117.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு துறையில் ByteDance மேற்கொண்டு வரும் பாரிய முதலீடுகள் மற்றும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் ஜாங் யிமிங்கின் உலகளாவிய செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.





Leave a Reply